வாழப்பாடி அருகே பஸ்-லாரி மோதல்; 15 பேர் படுகாயம்


வாழப்பாடி அருகே பஸ்-லாரி மோதல்; 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 29 Feb 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே பஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாழப்பாடி,

ஆத்தூரில் இருந்து வாழப்பாடி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பகல் 11.50 மணியளவில் ஒரு தனியார் பஸ் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடியில் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே சென்றபோது, கிடங்கில் இருந்து வெளியேறி சாலைக்கு திரும்பிய மளிகைப்பொருட்கள் ஏற்றிவந்த லாரி மீது பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில், பஸ்சில் இருந்த ஆத்தூர் நரசிங்கபுரம் பழனிவேல் (வயது 45), கலாவள்ளி (30), இவரது மகனான 4 வயது சிறுவன் ஹரே‌‌ஷ், ஆத்தூர் பாவேந்தர் தெரு கோவிந்தராஜ் (58), செல்லியம்பாளையம் சக்திவேல் (45), அலமேலு (48), சேலம் கோரிமேடு கவியரசன் (24), பெத்தநாயக்கன்பாளையம் ராமர் (70), பத்மாவதி (45), வாழப்பாடி பெரியசாமி நகர் பானு (28), ஆத்தூர் முல்லைவாடி அருணாச்சலம், தங்கதுரை (40) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

வாழப்பாடி போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, பஸ் இடிபாடுகளில் சிக்கியிருந்த காயம்பட்டவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மளிகைப் பொருட்களை ஏற்றிச்சென்ற லாரியில் தனியார் பஸ் மோதியதால், சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சாலையில் சிதறி நாசமானது. இதனால் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story