வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: வேன்-பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்


வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது பரிதாபம்: வேன்-பஸ் மோதல்; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 5:51 PM GMT)

வீரப்பூர் கோவில் விழாவிற்கு சென்று திரும்பிய போது, வேலாயுதம் பாளையம் அருகே வேன்-பஸ் மோதிய விபத்தில் 7 பேர் படு காயம் அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள நாட்டம் பாளையத்தை சேர்ந்த நண்பர்கள் 9 பேர் திருச்சி மாவட்டம் வீரப்பூர் கோவில் திரு விழாவை காண முடிவு செய்து, திருச்செங்கோட்டில் இருந்து ஒரு வேனில் புறப்பட்டு வந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

பின்னர் திருவிழா முடிந்ததும், மீண்டும் அவர்கள் சிவகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேன் நேற்று காலை 7 மணி அளவில் வேலாயுதம்பாளையம் அருகே கரூர்-சேலம் தேசியநெடுஞ்சாலையில் வந்தபோது, மலையம்பாளையம் பிரிவில் இருந்து தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் மெயின்ரோட்டுக்கு வந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக வேன், கல்லூரி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் வேன் 10 அடி தூரம் தள்ளி நின்றது.

7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேனில் இருந்த ராஜே‌‌ஷ் குமார் (30), கோபி(32), சக்திவேல்(25), கதிர்வேல்(32), ரமே‌‌ஷ்(35), நத்தகுமார்(34), ராஜ்கிரன் (27)ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேனில் இருந்த டிரைவர் வேல்முருகன், நல்லதம்பி(30) ஆகியோர் அதிர்‌‌ஷ்டவசமாக காயம்இன்றி தப்பினர்.

கல்லூரி பஸ் டிரைவர் பழனிசாமி(62) மாணவர்களை கல்லூரியில் இறக்கி விட்டு, டீக்கடையில் டீ குடித்துவிட்டு பஸ்சை மலையம்பாளையம் பிரிவில் திரும்பும்போது தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story