கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.91 லட்சம் தங்கம் பறிமுதல் பெண் கைது


கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.91 லட்சம் தங்கம் பறிமுதல் பெண் கைது
x
தினத்தந்தி 3 March 2020 11:00 PM GMT (Updated: 3 March 2020 7:57 PM GMT)

சென்னை விமான நிலையத்திற்கு கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.91 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த முகமது ஹக்கீல் (வயது 23), முகமது அர்ஷத் (28), முகமது அப்சல் (26) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.56 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 292 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ஜெனிதா (40) என்பவரை சந்தேகத்தின் பேரில், அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவரது மேலாடை மற்றும் பேண்ட்டில் தங்கச்சங்கிலி, வளையல்கள், கைச்சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 803 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ஆக மொத்தம் 4 பேரிடம் இருந்து ரூ.91 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 95 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜெனிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். சிலர்களிடம் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்?. அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story