ராமாயண ரெயில் தொடங்கி வைப்பு: ‘மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2 ஆண்டுகளில் செயல்படும்’ - மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பேட்டி


ராமாயண ரெயில் தொடங்கி வைப்பு: ‘மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2 ஆண்டுகளில் செயல்படும்’ - மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 5 March 2020 10:15 PM GMT (Updated: 5 March 2020 10:13 PM GMT)

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடர்பாக ஜப்பான் அரசுடன் செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கும் என்று மதுரையில் அளித்த பேட்டியில் கூறிய மத்திய சுகாதாரத்துறை இணைமந்திரி அஸ்வினி குமார் சவுபே, ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் ராமாயண ரெயிலையும் தொடங்கி வைத்தார்.

மதுரை,

மதுரையில் மத்திய சுகாதாரத்துறை இணைமந்திரி அஸ்வினி குமார் சவுபே நிருபர்களிடம் கூறியதாவது:- 

மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி கடந்த ஆண்டு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். தற்போது அங்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த ஆஸ்பத்திரி ரூ.1,264 கோடி செலவில் கட்டப்படுகிறது. அதற்காக ஜப்பான் அரசுடன் வருகிற செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்படும். அதன்பின் பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். உங்களிடம் உறுதியாக கூறுகிறேன் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி செயல்பட தொடங்கும்.

கடந்த 5 ஆண்டு மோடி ஆட்சியில் மட்டும் 28 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் தற்போது 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2022-23-ம் ஆண்டுக்குள் இதனை 1 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றவுடன் 75 புதிய மருத்துவ கல்லூரி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் கட்டப்படுகின்றன. இது தமிழக அரசின் மிகப்பெரிய சாதனையாகும். கர்ப்பிணி மரணம், குழந்தை இறப்பு விகிதங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. மருத்துவதுறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மந்திரியிடம் நிருபர்கள், ‘‘மதுரை எய்ம்ஸ் பணி மட்டும் ஏன் இன்னும் தொடங்கவில்லை? மத்திய அரசின் நிதியில் மதுரை எய்ம்ஸ் பணி மேற்கொள்ளாமல் ஜப்பானிடம் ஏன் கடன் வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நாட்டில் அமைய உள்ள பல்வேறு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறோம். அந்த அடிப்படையில் ஜப்பான் அரசிடம் இருந்து மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கடன் வாங்குகிறோம். தாமதம் எதுவும் இனி இருக்காது என்றார்.

அதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைமந்திரி அஸ்வினி குமார் சவுபே, மதுரை ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் ராமாயண எக்ஸ்பிரஸ் சுற்றுலா ரெயில் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பல்வேறு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையி்ல் இணைக்கப்படும் இந்த ரெயிலானது, நெல்லையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சேலம், சென்னை வழியாக அயோத்தி, நாசிக், ஹம்பி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தொடக்க விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story