கார் பள்ளத்தில் கவிழ்ந்து பாட்டி-பேரன் பலி - திருமண வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
அரவக்குறிச்சி அருகே திருமண வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து பாட்டி-பேரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
அரவக்குறிச்சி,
ஈரோடு மாவட்டம், கொடுமுடி விருப்பம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவருடைய மனைவி கனிமொழி (28). இவர்களது மகன் சரனேஷ் (9), மகள் குணஸ்ரீ (2), கனிமொழியின் தாயார் நல்லம்மாள் (80). இவர்கள் 5 பேரும் ஒரு காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து அதே காரில் நேற்று முன்தினம் மாலை ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை செல்வராஜ் ஓட்டினார். அந்த கார் கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி மணல்மேடு அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கனிமொழி, சரனேஷ், நல்லம்மாள், ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 3 பேரையும்மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சரனேஷ் மற்றும் அவரது பாட்டி நல்லம்மாள் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
Related Tags :
Next Story