வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: ஆதாரங்களை அழித்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்


வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம்: ஆதாரங்களை அழித்த போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2020 12:00 AM GMT (Updated: 10 March 2020 8:32 PM GMT)

திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் ஆதாரங்களை அழித்த போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 போலீசாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது தந்தை ரவிக்குமார் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து உள்ளார்.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் பள்ளிபாளையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய வி‌‌ஷ்ணுபிரியாவை கோர்ட்டு, விசாரணை அதிகாரியாக நியமனம் செய்தது.

இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வி‌‌ஷ்ணுபிரியா அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கை முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.வசம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதிய ஆதாரம் இல்லாததால் கோவை சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

23 கேள்விகள்

இந்தநிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு வி‌‌ஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட அவருடைய லேப் டாப், செல்போன், டேப் ஆகியவற்றில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது தந்தை ரவிக்குமார் கடந்த மாதம் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து வி‌‌ஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் முன்பு நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் 23 கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெறப்பட்டது.

ஆதாரங்கள் அழிப்பு

இதையடுத்து வெளியே வந்த வி‌‌ஷ்ணுபிரியாவின் தந்தை ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வி‌‌ஷ்ணுபிரியாவின் செல்போன், லேப்டாப்பில் இருந்த ஆதாரங்களை அப்போது பணியாற்றிய துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜு, ராதாகிரு‌‌ஷ்ணன், முதல்நிலை காவலர் முத்துக்குமார், ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் அழித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திட கோரி புகார் அளித்தேன்.

மேலும் உயர்போலீஸ் அதிகாரி ஒருவரின் தொல்லை தான் வி‌‌ஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கு காரணம் ஆகும். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் 8-ம் பக்கத்தில் தற்கொலை விவகாரம் தொடர்பான தகவல் டேப்பில் இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால் டேப்பில் இருந்த விவரங்களை போலீசார் அழித்து விட்டனர். எனவே தான் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என புகார் கொடுத்து உள்ளேன். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்து உள்ளார். அவரது விசாரணை திருப்திகரமாக இருந்தது. என்னிடம் கேட்கப்பட்ட 23 கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story