கலெக்டர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட முயற்சி
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாய தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்றனர்.
கடலூர்,
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாதிரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட நத்தவெளி சாலையில் வசித்துவந்த விவசாய தொழிலாளர்களின் குடிசைகள் அகற்றப்பட்டன. இவர்களுக்கு மாற்று இடத்தில் வீட்டு மனை வழங்க வேண்டும், சி.என்.பாளையம், மாதா கோவில் தெருவில் வசித்து வரும் மக்களுக்கு சுடுகாட்டுப்பாதையை சீரமைத்து தர வேண்டும், மனு கொடுத்து காத்திருக்கும் செம்மங்குப்பம், செங்காட்டு காலனி, சி.என்.பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்து இருந்தது.
இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா, துணை தலைவர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்றனர். இதை ஏற்று விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரனிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story