தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி பாலகிரு‌‌ஷ்ணன் குற்றச்சாட்டு


தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி பாலகிரு‌‌ஷ்ணன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 6:31 PM GMT)

தகுதி நீக்க விவகாரத்தில் 11 எம்.எல்.ஏ.க்களை தப்பிக்க வைக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் நகராட்சி மூலம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை குடித்த பொதுமக்கள் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

ஆய்வு மையம்

தரமான குடிநீரை கூட தர முடியாத நிலையில் நகராட்சி செயல்பட்டு வருகிறது. நோய் வந்ததற்கு பின்பு தீர்வு காண முயற்சிப்பதை விட முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டு, நோய்கள் வராமல் தடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும். திருவாரூர் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசின் சுகாதாரத்துறை சிறப்பு குழுவை அமைத்து அதிக அளவிலான மருத்துவ முகாம்களை இந்த பகுதியில் நடத்த வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்வதற்கு மாவட்டந்தோறும் ஆய்வு மையம் அமைக்க வேண்டும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் தரும் தகவல்களில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. எனவே உறுதியான தகவல்களை தர வேண்டும்.

தப்பிக்க வைக்க முயற்சி

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் அனைவரையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி சபாநாயகரும் சட்டத்தின் முன்பாகவும், மக்கள் முன்பாகவும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story