ரெயில், கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு நெல்லையில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


ரெயில், கோவில்களில் கிருமி நாசினி தெளிப்பு நெல்லையில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 1:45 PM GMT)

நெல்லையில் ரெயில், கோவில்களில் கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை, 

நெல்லையில் ரெயில், கோவில்களில் கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நெல்லை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சந்திப்பு ரெயில் நிலையம் 

மேலும் தியேட்டர், பஸ் உரிமையாளர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கிருமி பரவாமல் செய்ய வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி தொங்கியது. அவர்கள் அந்த வழியாக வந்த ரெயில்களின் என்ஜின் பகுதி, பெட்டிகளில் பயணிகள் இருக்கை பகுதி மற்றும் தண்டவாளம், பிளாட்பாரம், பயணிகள் வந்து செல்லும் வழிகளிலும் கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும் சந்திப்பு ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரெயில்வே ஆஸ்பத்திரி சார்பில் கை கழுவுதல் முறை குறித்தும் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோவில் 

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் –காந்திமதி அம்பாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதையொட்டி அங்கேயும் நேற்று மாலையில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினியுடன் வந்தனர்.

அவர்கள் கோவில்களில் பக்தர்கள் வந்து செல்லும் நுழைவு வாசல் பகுதி மற்றும் அமர்ந்து வழிபடும் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர். இதே போல் பல்வேறு கோவில்களிலும் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

முககவசம் விலை உயர்வு 

மேலும் அரசு ஊழியர்கள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி ரெயில்வே ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாரும் குறைந்த அளவில் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். குறைவான அளவே மருத்துவ பணியாளர்கள் மட்டும் வாங்கி பயன்படுத்தி வந்த முக கவசத்துக்கு தேவை அதிகரித்து இருப்பதால், அதன் விலை அதிகரித்து உள்ளது. ரூ.2 முதல் 5 வரை விற்பனை செய்யப்பட்ட முக கவசம் தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரை உயர்ந்து உள்ளது. இந்த ரக முக கவசங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடியது ஆகும். 

Next Story