முதல்-அமைச்சர் பதவி வேண்டாம்: ரஜினியின் அறிவிப்பை கேட்டு திருச்சி ரசிகர்கள் ஏமாற்றம்


முதல்-அமைச்சர் பதவி வேண்டாம்: ரஜினியின் அறிவிப்பை கேட்டு திருச்சி ரசிகர்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 13 March 2020 12:00 AM GMT (Updated: 12 March 2020 7:26 PM GMT)

முதல்-அமைச்சர் பதவி வேண்டாம் என ரஜினியின் அறிவிப்பை கேட்டு திருச்சி ரசிகர்கள் மனவேதனை அடைந்தனர். மேலும் தாங்கள் வாங்கி வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து கொண்டாட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருச்சி,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அரசியலுக்கு வருவதாக ரசிகர்கள் மத்தியில் அறிவித்தார். அத்துடன் விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் எனவும் கூறினார். இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதையடுத்து பம்பரமாக சுழன்று ரஜினி மக்கள் மன்றத்திற்கு ஆன்லைன் மூலமாக உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கினார்.

இப்படி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள், அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கினர். சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியே சொல்ல முடியாது என்றும், ஆனால் தனக்கு ஒரு ஏமாற்றம் இருப்பதாகவும், அதை பின்னர் தெரிவிப்பதாகவும் ரஜினிகாந்த் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால், ரஜினிகாந்தின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டது.

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தனது மன்ற மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘தான் கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன் என்றும், தனக்கு முதல்-அமைச்சர் பதவி வேண்டாம். அப்பதவி நன்கு படித்த நல்லவர்கள் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்றும், முதல்-அமைச்சர் வேட்பாளராக தன்னை பிரகடனப்படுத்துவார் என்றும்' தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள் மாவட்டந்தோறும் கொடியுடன் ஆங்காங்கே திரண்டு நின்றனர். அதேபோல் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் ரஜினி ரசிகர்கள் மன்ற கொடியுடன் பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றுடனும், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடவும் ஆர்வமாக கூடினர். ஆனால், ரஜினிகாந்தின் அறிவிப்பு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், மனவேதனையையும் அடைய செய்தது. அறிவிப்பு வெளியாகும் வரை உற்சாகமாக ஆர்ப்பரித்த அவர்கள், மாறுபட்ட அறிவிப்பை கேட்டு மனச்சோர்வுக்கு உள்ளாகினர். இதுபோல ஸ்ரீரங்கம் பகுதியில் ரஜினி ரசிகர்கள் பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் திரண்டிருந்தனர். ரஜினியின் அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிபோன ரசிகர்கள் தாங்கள் கொண்டு வந்த பட்டாசுகளையும், இனிப்புகளையும் மிகுந்த சோகத்துடன் திரும்ப எடுத்துச் சென்றனர்.

Next Story