திருமாவளவன் மீது வழக்குப்பதிவு போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை 104 பேர் கைது


திருமாவளவன் மீது வழக்குப்பதிவு போலீஸ் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை 104 பேர் கைது
x
தினத்தந்தி 13 March 2020 12:02 AM GMT (Updated: 13 March 2020 12:02 AM GMT)

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 104 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை கம்பன் கலையரங்கத்தில் கடந்த 9-11-2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்து தெய்வங்களை அவமதித்து பேசியதாக பெரம்பலூர்் நகர இந்து முன்னணி பொதுச்செயலாளர் கண்ணன் அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.

ஆனால் சம்பவம் நடந்த இடம் புதுச்சேரி என்பதால் தமிழக போலீசார் அந்த புகாரை புதுச்சேரி போலீசாருக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முற்றுகை

திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்தனர். இதன்படி அவர்கள் நேற்று ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்ட னர்.

அவர்களை போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போலீசாருக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

104 பேர் கைது

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் உள்பட 104 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story