சுசீந்திரம் அருகே மினி பஸ் மோதி தொழிலாளி பலி


சுசீந்திரம் அருகே மினி பஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 16 March 2020 4:30 AM IST (Updated: 16 March 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

சுசீந்திரம் அருகே மினிபஸ் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் அருகே புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்ட பிரவீன்(வயது 30), கட்டிட தொழிலாளி. தற்போது இவர் தெங்கம்புதூரை அடுத்த கீழக்காட்டுவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி ஜாய்பெல். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜாய்பெல் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை தெங்கம்புதூரில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு மணிகண்ட பிரவீன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர், நண்பரை பார்த்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக தெங்கம்புதூர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

மினி பஸ் மோதியது

அப்போது, அம்பலப்பதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மினிபஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மினி பஸ் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் கீழ் பகுதியில் சிக்கி மணிகண்ட பிரவீன் சாலையில் தர தரவென இழுத்துச் செல்லபட்டார்.

விபத்து நடந்த சத்தம் கேட்டு அங்கு நின்றவர்கள் அலறினார்கள். உடனே, டிரைவர் அங்கே பஸ்சை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்ட பிரவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கதறி அழுத மனைவி

தகவல் அறிந்த சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ஜெகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே மணிகண்ட பிரவீன் விபத்தில் இறந்த தகவல் அறிந்து அவருடை மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். நிறைமாத கர்ப்பிணியான மனைவி மணிகண்ட பிரவீனின் உடலை பார்த்து கதறி அழுதார். இது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

பின்னர், போலீசார் மணிகண்ட பிரவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் சுமார் 1 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story