குடிமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை-பணம் திருட்டு - தம்பதி கைது


குடிமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை-பணம் திருட்டு - தம்பதி கைது
x
தினத்தந்தி 16 March 2020 4:15 AM IST (Updated: 16 March 2020 6:11 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் வங்கி செயலாளரிடம் நகை, பணம் திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடிமங்கலம்,

கோவையை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 42). இவர் குடிமங்கலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார். ஜெயபாரதி தினமும் பஸ்சில் கோவையில் இருந்து பல்லடம் வழியாக குடிமங்கலம் வந்து விட்டு பணி முடிந்ததும் திரும்பி செல்வது வழக்கம். ஜெயபாரதி பாதுகாப்பு கருதி பஸ்சில் வரும்போது நகை மற்றும் பணத்தை கைப்பையில் வைத்துக்கொள்வார்.

சம்பவத்தன்று பணி முடிந்ததும் ஜெயபாரதி குடிமங்கலத்தில் இருந்து பல்லடத்திற்கு செல்ல தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்ட நெரிசல் காரணமாக நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அருகில் நின்ற யாரோ ஒருவர் ஜெயபாரதி கைப்பையில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து ஜெயபாரதி தனது கைப்பையை பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். யாரோ கைப்பையின் ஜிப்பை திறந்து நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயபாரதி குடிமங்கலம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். குடிமங்கலம் போலீசார் பஸ்சில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஜெயபாரதியின் கைப்பையின் ஜிப்பை திறந்து நகை மற்றும் பணத்தை திருடுவது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

கேமராவில் பதிவான உருவத்தை போலீசார் ஆய்வு செய்ததில் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடைய தாராபுரம் காங்கேயம்பாளையத்தை சேர்ந்த மதன் என்ற செல்வகுமார் என்பவரின் மனைவி சுமதி (30) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுமதி மற்றும் அவரது கணவர் மதன் ஆகியோரை குடிமங்கலம் போலீசார் கொங்கல்நகரத்தில் வைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயபாரதியின் கைப்பையின் ஜிப்பை திறந்து அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.10ஆயிரத்தை சுமதி திருடியுள்ளார். பணம் மற்றும் நகைகளை திருடியவுடன் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு குடிமங்கலம் அருகில் உள்ள பெரியபட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். பெரியபட்டி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த கணவர் மதன் என்ற செல்வகுமாருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது தெரிய வந்தது.

Next Story