சென்டிரல் ரெயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாம் வருவாய் நிர்வாக கமி‌‌ஷனர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆய்வு


சென்டிரல் ரெயில் நிலையத்தில்  கொரோனா வைரஸ் தடுப்பு முகாம்   வருவாய் நிர்வாக கமி‌‌ஷனர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 16 March 2020 10:45 PM GMT (Updated: 16 March 2020 6:33 PM GMT)

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு முகாமை வருவாய் நிர்வாக கமி‌‌ஷனர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆய்வு செய்தார்.

சென்னை, 

தமிழக அரசு சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வெளி ஊர்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள முகாமை வருவாய் நிர்வாக கமி‌‌ஷனர் டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி உடனிருந்தார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

72 ரெயில்கள்

சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 72 ரெயில்கள் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

இந்த ரெயில்கள் அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதில் வரும் வெளிமாநிலத்தை சேர்ந்த பயணிகள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்று கண்டறிய தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வட மாநிலங்களில் இருந்தே பெரும்பாலானவர்கள் வருவதால், அந்த பயணிகளிடம் எளிதாக புரியும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வு அறிவிக்கப்படுகிறது. அனைத்து துறைகளும் இணைந்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story