சேலத்தில் 3-வது நாளாக 2 கோவில்களில் உண்டியல் உடைப்பு


சேலத்தில் 3-வது நாளாக 2 கோவில்களில் உண்டியல் உடைப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 3-வது நாளாக மேலும் 2 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மணியனூரில் உள்ள காளியம்மன், அன்னதானப்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், சண்முகாநகர் ராஜகாளியம்மன் கோவில் ஆகியவற்றில் கடந்த 13-ந்தேதியும், சேலம் திருமலைகிரியில் உள்ள அய்யனாரப்பன், கருப்பசாமி, பெரியாண்டிச்சி அம்மன் கோவில், சேலம் சிவதாபுரம் பச்சைப்பட்டினி மாரியம்மன் ஆகிய கோவில்களில் கடந்த 14-ந்தேதியும் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 3-வது நாளாக சேலம் கொண்டலாம்பட்டி அருகே காட்டூர் சக்தி மாரியம்மன், நியூ காந்திநகர் மாரியம்மன் ஆகிய 2 கோவில்களில் உண்டியல்களை மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு உடைக்கப்பட்ட கோவில் உண்டியலை பார்வையிட்டு கோவில் நிர்வாகிகளிடம் விசாரித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பரபரப்பு

இது குறித்து இந்த 2 கோவில் நிர்வாகிகளிடம் கேட்ட போது, இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த வாரம் தான் நடந்து முடிந்தது. விழா முடிந்ததும் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை எடுக்கப்பட்டு விட்டது. எனவே உண்டியலில் பணம் இருக்க வாய்ப்பு இல்லை. பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்று இருப்பார்கள், என்று கூறினர்.

சேலத்தில் தொடர்ந்து 3-வது நாளாக, மேலும் 2 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டது சேலம் மாநகர் பகுதியில் பொது மக்கள், பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 வாலிபர்கள்

சேலம் கோவில்களில் உண்டியல்களை உடைத்து தொடர்ந்து கைவரிசை காட்டி வரும் மர்ம நபர்களை பிடிக்க சேலம் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் திருட்டு நடந்த கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் 3 வாலிபர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

எனவே இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு இருப்பது ஒரே கும்பல் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில் மர்ம நபர்கள் அடையாளம் தெரிந்து உள்ளது. அவர்கள் எங்கு உள்ளார்கள் என்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். எனவே மர்ம நபர்களை விரைவில் கைது செய்வோம், என்று கூறினர்.


Next Story