விபத்துகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி - கலெக்டர் வழங்கினார்


விபத்துகளில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 8:25 PM GMT)

விபத்துகளில் உயிரிழந்த 3 பேர்களின் குடும்பத்திற்கு முதல்- அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உதவி தொகையை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடா்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடா்பாக மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் உள்பட 242 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தி்ல் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

சமூகவலைதளம், வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகள் மீது விரைவில் தீர்வு கண்டு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு மனுவிற்கும் ஒருமாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மீன்வளத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இழுவலைகளையும், தொடர்ந்து, சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆதித்யா என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உதவிதொகையையும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த அபிேஷக் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சமும், பாம்பு கடித்து உயிரிழந்த தனலெட்சுமி குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சமும், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் காளிமுத்தன், மாவட்ட கலெக்டர் நோ்முக உதவியாளர் சுப்புராஜ் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காரைக்குடி காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் மாவட்டதலைவர் அருளானந்து கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய கல்வி நகரமான காரைக்குடியில் அனைத்து நேரத்திலும் மதுவிற்பனை செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே அனைத்து மதுக் கடைகளிலும் பள்ளி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மது விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டு்ம்அத்துடன் அனுமதியின்றி மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story