‘‘கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்" கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
விழிப்புணர்வு முகாம்
நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் நெல்லை மாநகராட்சி ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு முகாமை நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை நடத்தின.
கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாநகர் நல அலுவலர் சதீஷ்குமார் கலந்து கொண்டு, எவ்வாறு கொரோனா வைரசை கட்டப்படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.
முகாமில் கலெக்டர் ஷில்பா பேசியதாவது:–
தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது
தமிழக அரசு உத்தரவுப்படி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
வைரஸ் குறித்து துண்டு பிரசுரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கிருமிநாசி
பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள ஆட்டோ, கார், வாடகை கார் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வழிபாட்டு தலங்களையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோவில்களில், பஸ் நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் ஷில்பா ஆட்டோ டிரைவர்களுக்கும், அங்கு வந்த பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். பஸ் நிலையத்தில் உள்ள பஸ்கள், ஆட்டோக்கள், கார்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
முகாமில், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போலீசாருக்கு பயிற்சி
இதேபோல் நெல்லை மாவட்ட போலீசாருக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் கைகழுவுதல் பயிற்சி மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கமிஷனர் சரவணன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரளான போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story