கலபுரகி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் தாக்கியது கர்நாடகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது


கலபுரகி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் தாக்கியது   கர்நாடகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 17 March 2020 11:18 PM GMT (Updated: 17 March 2020 11:18 PM GMT)

கர்நாடகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த கலபுரகி முதியவருக்கு சிகிச்சை அளித்த டாக்டரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை10ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு, 

சீனாவில் உகான் நகரில் இருந்து உருவான கொரோனா என்ற கொவெட்-19 வைரஸ், தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரசுக்கு இதுவரை கர்நாடக மாநிலம் கலபுரகியைச் சேர்ந்த முதியவர் உள்பட 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். 120-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தை பொறுத்த வரையில் நேற்று முன்தினம் வரை 7 பேர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

10 ஆக அதிகரிப்பு

அவர்கள் லண்டனில் இருந்து கர்நாடகம் வந்த 20 வயது இளம்பெண், கலபுரகியில் மரணம் அடைந்த 76 வயது முதியவருக்கு சிகிச்சை அளித்த 63 வயது டாக்டர் மற்றும் துபாயில் இருந்து கோவா மூலம் பெங்களூருவுக்கு வந்த 67 வயது பெண் ஆகியோர் ஆவார்கள். அவர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள டாக்டரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கண்காணித்து வருகிறார்கள்

நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து கர்நாடகம் திரும்பிய 32 வயது நிரம்பிய தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோன பாதிப்பு உறுதியானது என்பது குறிப் பிடத்தக்கது. அவர் கர்நாடகத்தில் கண்டறியப்பட்ட 8-வது நோயாளி ஆவார். அவர் வீட்டில் தனிமையில் இருந்தபோது, அவருடன் சுமார் 50 பேர் தொடர்பில் இருந்ததை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த 50 பேரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அவர்களிடம் கொரோனா அறிகுறி இல்லை என்றபோதும், அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள், வணிக வளாகங்கள், தேசிய உயிரியல் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. அதிக அளவில் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

200 படுக்கைகள்

மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் நேற்று பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அங்கு பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 17 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 150 முதல் 200 படுக்கைகளை கொண்ட தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்துள்ளது.

Next Story