கொரோனா பரவலை தடுக்க அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல் மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால் ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை


கொரோனா பரவலை தடுக்க அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல்  மக்கள் அவசியம் இன்றி பயணம் செய்தால்   ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும்   முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 March 2020 5:46 AM IST (Updated: 18 March 2020 5:46 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் அவசியம் இன்றி பயணங்களை தொடர்ந்தால் மும்பையில் மின்சார ரெயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்தார்.

மும்பை, 

மராட்டியத்தில் நேற்று முன்தினம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆக இருந்தது.

41 ஆக அதிகரிப்பு

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அமெரிக்காவில் இருந்து வந்த மும்பையை சேர்ந்த 49 வயது நபருக்கும், 14-ந் தேதி அமெரிக்காவில் இருந்து வந்த புனேயை சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.

முன்னதாக நேற்று காலை மும்பையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 64 வயது முதியவர் உயிரிழந்தார்.

இதனால் மற்ற 40 கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மந்திரி சபை கூட்டம்

இந்தநிலையில் நேற்று மாலை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவசரமாக மந்திரி சபை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடுத்து வருகிற 15 நாட்கள் மிகவும் முக்கியமானதாகும். எனவே அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புனேயில் உரிமையாளர்கள் அவர்களாகவே கடைகளை மூடி உள்ளனா். அதுபோல மற்ற இடங்களிலும் மளிகை கடை போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்றவைகள் மூடப்பட்டால் நன்றாக இருக்கும்.

போக்குவரத்து நிறுத்தப்படும்

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள கடினமான சூழலை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

மும்பையில் அத்தியாவசிய தேவைகளான மின்சார ரெயில், பஸ் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அவசியமற்ற பயணங்களை தவிர்க்க தவறினால், மின்சார ரெயில், பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய கடினமான நிலைக்கு அரசு தள்ளப்படும்.

50 சதவீத ஊழியர்களுடன்...

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் சில நாட்கள் மூடப்படும்.

7 நாட்களுக்கு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் நிர்வாக பணிகளில் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Next Story