டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து சாலை மறியல்
டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனைக்குளம்,
பட்டணம்காத்தான் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க முயன்றதால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் திடீரென டாஸ்மாக் கடையை பூட்டி தேவிபட்டினம்-ராமேசுவரம் புறவழிச்சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேசுவரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டிய பஸ்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளத்துரை சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஆத்மநாதசாமி நகர் மற்றும் சுப்பையா நகர், பட்டணம்காத்தான் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி குடியிருப்பு பகுதிக்குள் டாஸ்மாக்கடை திறக்க முயன்றதால் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். அதையும் மீறி திறக்கப்பட்டால் அதை அகற்றுவோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் பா.ஜ.க. மாநில துணை தலைவர் குப்புராமு, மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஆத்மா கார்த்திக், பட்டணம்காத்தான் ஒன்றிய கவுன்சிலர் முருகன், மண்டபம் ஒன்றிய தலைவர் முருகேசன், யாதவர் சங்க தலைவர் சாத்தையா, சேகர், வடமலை உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story