4 வழிச்சாலை அமைக்கும் பணி: புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல்


4 வழிச்சாலை அமைக்கும் பணி: புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 March 2020 11:30 PM GMT (Updated: 18 March 2020 10:03 PM GMT)

திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல்-நத்தம் சாலையில், 38 கிலோமீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 10 மாதங்களாக நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லை அடுத்த ஆர்.எம்.டி.சி.காலனி அருகே சாலை அமைப்பதற்காக, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிராவல் மண் பரப்பப்பட்டது. ஆனால், அதன்பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கின்றன. குறிப்பாக கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும் போது ஒருவர் முகம் மற்றொருவருக்கு தெரியாத வகையில் புழுதி மண்டலமாக காட்சி அளிக்கிறது. அந்த சமயத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவர்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

கிராம மக்கள் மறியல்

இதுமட்டுமின்றி புழுதி பறப்பதால், அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு, கண் எரிச்சல் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எம்.டி.சி காலனி, எஸ்.பி தோட்டம், அழகர்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து, ஆர்.எம்.டி.சி.காலனி நத்தம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினரை வலியுறுத்துவதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story