தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது - கோர்ட்டில் ஒருவர் சரண்


தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது - கோர்ட்டில் ஒருவர் சரண்
x
தினத்தந்தி 20 March 2020 4:00 AM IST (Updated: 20 March 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்க செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

மதுரை, 

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வக்கீல் வேலுச்சாமியின் (வயது 72) வீடு மதுரை அண்ணாநகர் கிழக்கு குறுக்கு தெருவில் உள்ளது. இங்கு வீட்டு வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டது. சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது வீட்டு வாசலில் ஒயர், 12 வால்ட் பேட்டரி, பட்டாசுக்கு பயன்படுத்தும் கரி மருந்து, பிளாஸ்டிக் சிதறல்கள் போன்றவை கிடந்தன.

இது தொடர்பாக அந்த வீட்டின் எதிரே ஒரு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உணவு சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்தின் பனியன் அணிந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று ஒரு பார்சலை வீட்டின் உள்ளே தூக்கி வீசிவிட்டு ரிமோட் போன்ற பொருளை வைத்து அழுத்தினர். அடுத்த நொடியில் அங்கு வெடிசத்தம் ஏற்பட்டு புகை மண்டலமாகி உள்ளது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் கார்த்திக், உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சிதறல் எந்த வகையை சேர்ந்த வெடிகுண்டு என்பதை அறிய அதனை கோவைக்கு அனுப்பி பரிசோதிக்க வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் வேலுச்சாமி வீட்டில் வெடிகுண்டை வெடிக்க வைத்தது தொடர்பாக மதுரை காமராஜர்புரம் இந்திராநகரை சேர்ந்த மலைச்சாமி (43), அவருடைய சித்தப்பா கருப்பணன் மகன் ஜெயராம்(32) ஆகியோர் சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி ரேவதி முன்பு சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

சரண் அடைந்த மலைச்சாமி குடும்பத்தினரும், வேலுச்சாமியும் ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலுச்சாமி தேர்தலில் நிற்பதற்காக அவர்கள் குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சொன்னபடி பணத்தை கொடுக்கவில்லை. இது தவிர பல்வேறு பிரச்சினைகளில் அவர்களுக்கு ஆதரவாக வேலுச்சாமி செயல்படவில்லையாம். இந்த நிலையில்தான் அவரது மகன் கொலை செய்யப்பட்டார். இதில் மலைச்சாமி, அவரது தம்பி சுரேஷ், ஜெயராம் அண்ணன் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மலைச்சாமி, மணிகண்டன் மட்டும் 14 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த ஆண்டு விடுதலை ஆனார்கள்.

வேலுச்சாமியால் தான் அவர்கள் குடும்பம் இந்த நிலைக்கு வந்ததாக அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று மலைச்சாமியும், ஜெயராமும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் மலைச்சாமிக்கு போதை அதிகமானதால் அவரை ஜெயராம் திருச்சிக்கு அனுப்பி வைத்து விட்டார். அதைத் தொடர்ந்து ஜெயராம் ஜெயிலில் பழக்கமான பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த யாசின் முகமது அலியை (22) அழைத்தார்.

பின்னர் அவர்கள் இருவரும் உணவு சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்தின் பனியன் அணிந்து மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்றனர். யாசின்முகமதுஅலி வேலுச்சாமியின் வீட்டின் உள்ளே வெடிகுண்டை வைத்து விட்டார். பின்னர் ஜெயராம் கையில் வைத்திருந்த ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தார். பின்னர் யாசின்முகமதுஅலி அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

வேலுச்சாமியால் தான் மலைச்சாமி, ஜெயராம் குடும்பம் இந்த நிலைக்கு ஆளானது என்று கூறி, அவரை மிரட்டவே வீட்டில் வெடிகுண்டை வெடிக்க வைத்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் மலைச்சாமி, ஜெயராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே யாசின் முகமது அலி மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை மாஜிஸ்திரேட் முத்துராமன் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Next Story