எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 8,616 மாணவர்கள் எழுத உள்ளனர் ; முதன்மை கல்வி அதிகாரி தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வினை 8,616 மாணவ- மாணவிகள் எழுத உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தெரிவித்தார்.
பெரம்பலூர்,
10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் எவ்வாறு நடத்துவது குறித்து பள்ளி ஆசிரியர்களிடையே ஆயத்த கூட்டம் பெரம்பலூர் சாரணர் கூட்டரங்கில் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் தலைமை தாங்கினார்.
அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்ராஜா, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்), முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் பேசுகையில், எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 39 மையங்களில் 141 பள்ளிகளை சேர்ந்த 4,589 மாணவர்களும், 4,027 மாணவிகளும் என மொத்தம் 8,616 பேர் எழுதவுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 39 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 39 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். தேர்வு மையத்திற்கு 11 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 11 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 490 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்- வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வினாத்தாள் பாதுகாப்பு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் எவ்வித ஒழுங்கீன செயலுக்கும் இடம் கொடுக்காமல் தேர்வினை சிறப்பாக நடத்த ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட 10-ம் வகுப்பு பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story