144 தடை உத்தரவு எதிரொலி: தஞ்சையில், காய்கறிகள் வாங்க குவிந்தனர் மக்கள்; உயர்ந்தது விலை


144 தடை உத்தரவு எதிரொலி: தஞ்சையில், காய்கறிகள் வாங்க குவிந்தனர் மக்கள்; உயர்ந்தது விலை
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 7:16 PM GMT)

144 தடை உத்தரவு எதிரொலியால் தஞ்சை காமராஜ் மார்க்கெட்டில் காய்கறி வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்தது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களான மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், பால் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்படும் என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது..

தஞ்சை-புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் செயல்படும் தற்காலிக காமராஜ் மார்க்கெட் வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மார்க்கெட் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவிந்தனர் மக்கள்; உயர்ந்தது விலை

இந்த நிலையில் அரசின் 144 தடை உத்தரவு காரணமாக தற்காலிக காமராஜ் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக நேற்று அதிகாலை முதலே மக்கள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்ததாலும், மக்கள் அதிகமான அளவு காய்கறிகளை வாங்கி சென்றதாலும் அனைத்து காய்கறிகள் விலையும் உயர்ந்தது. சின்ன வெங்காயம், பல்லாரி வரத்தும் குறைந்ததால் அவற்றின் விலையும் உயர்ந்தது.

விலை விவரம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று ரூ.80-க்கும், ரூ.25-க்கு விற்ற பல்லாரி ரூ.35-க்கும் விற்பனையானது. ரூ.30-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.60-க்கும், ரூ.30-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.35-க்கும், ரூ.15-க்கு விற்ற முட்டைக்கோஸ் ரூ.20-க்கும், ரூ.50-க்கு விற்ற அவரைக்காய் ரூ.60-க்கும், ரூ.40-க்கு விற்ற பாகற்காய் ரூ.50-க்கும் விற்பனையானது.

ரூ.40-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.60-க்கும், ரூ.15-க்கு விற்ற சவ்சவ் ரூ.35-க்கும், ரூ.20-க்கு விற்ற காலிபிளவர் ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.35-க்கும், ரூ.20-க்கு விற்ற புடலங்காய் ரூ.30-க்கும், ரூ.60-க்கு விற்ற இஞ்சி ரூ.80-க்கும், ரூ.10-க்கு விற்ற தக்காளி ரூ.25-க்கும் விற்பனையானது.

வரத்து குறைந்ததால் விலை உயர்வு

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறும்போது, சின்ன வெங்காயம், பல்லாரி ஏற்றப்பட்ட லாரிகள் 5 மாநிலங்களை கடந்து வர வேண்டியது நிலை உள்ளது. ஆங்காங்கே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் லாரிகள் வர தாமதம் ஆகிறது. அதேபோல் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. நாளை(அதாவது இன்று) காய்கறிகள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதால் விலை குறையும் என்றனர்.

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மளிகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்களும் வழக்கத்தை விட கூடுதலாக பொருட்களை வாங்கிச்சென்றனர். சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Next Story