தர்மபுரி மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்


தர்மபுரி மாவட்டத்தில் ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 9:08 PM GMT)

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அலைேமாதினர்.

தர்மபுரி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் சேலம்-பெங்களூரு மார்க்கத்தில் தர்மபுரி வழியாக தினமும் 25-க்கும் மேற்பட்ட ரெயில்களும், சேலம்-சென்னை மார்க்கத்தில் மொரப்பூர் வழியாக 50-க்கும் மேற்பட்ட ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்து ரெயில்களும் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நடமாட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு

மாவட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையமான தர்மபுரி ரெயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதேபோல் மொரப்பூர், பாலக்கோடு, தொப்பூர், பொம்மிடி ஆகிய ரெயில் நிலையங்களும் மூடப்பட்டன. இதையொட்டி பொதுமக்கள், பயணிகள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் ரெயில் நிலைய வளாக பகுதிகளில் நடமாடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று ரெயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

இதேபோல் நேற்று மாலை 6 மணியுடன் தர்மபுரி மாவட்டத்தில் கடத்தூர், அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மதுபானங்கள் வாங்க கடைகள் முன்பு திரண்டனர். அவர்கள் வரிசையில் காத்திருந்து பைகளில் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். கடைகளில் கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Next Story