கொரோனா வைரசை ஒழிக்க மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்


கொரோனா வைரசை ஒழிக்க மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 March 2020 4:30 AM IST (Updated: 26 March 2020 1:51 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை ஒழிக்க, மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 30 படுக்கைகளைக் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மற்றொரு இடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 6 படுக்கை வசதிகளுடன் கூடிய வார்டை உருவாக்குமாறு டாக் டர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தினார். மேலும் அவர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் பணியாற்றும் டாக்டர் கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை பாராட்டினார்.

பின்னர் கோவில்பட்டி பழைய நகரசபை அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த முககவசம், கை கழுவும் திரவம் போன்றவற்றின் விற்பனையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இங்கு முககவசம் ரூ.8-க்கும், கை கழுவும் திரவம் அரை லிட்டர் ரூ.40-க்கும், லைசால் அரை லிட்டர் ரூ.50-க்கும், சானிட்டைசர் அரை லிட்டர் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம், கை கழுவும் திரவம், லைசால், சானிட்டைசர் போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்து, லாப நோக்கமின்றி உற்பத்தி விலைக்கே பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் 14 நகரங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவை அனைவரும் ஏற்று வீடுகளிலேயே இருக்க வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் நம்மை தாக்காமலும், நம் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமலும் தடுக்க முடியும். எனவே, அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. அதன்படி அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க உத்தரவிட்டு உள்ளார். மேலும் இயற்கை பேரிடர் மேலாண்மை நிதியில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளார். மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளைக் கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரசை ஒழிக்க, அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கை மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை என்ற நிலையை உருவாக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சின்னப்பன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, அரசு ஆஸ்பத்திரி கண்கா ணிப்பாளர் டாக்டர் கமலவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story