கேரளாவில் இருந்து குழந்தைகளுடன் பெருந்துறை வந்த தொழிலாளர்கள் - போலீசார் உணவு வழங்கினர்


கேரளாவில் இருந்து குழந்தைகளுடன் பெருந்துறை வந்த தொழிலாளர்கள் - போலீசார் உணவு வழங்கினர்
x
தினத்தந்தி 28 March 2020 3:45 AM IST (Updated: 28 March 2020 2:38 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து குழந்தைகளுடன் பெருந்துறை வந்த தொழிலாளர்களுக்கு போலீசார் உணவு வழங்கினர்.

சென்னிமலை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சுமார் 20 குடும்பத்தினர் கூலி வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம், திருச்சூருக்கு சென்றிருந்தனர். இவர்கள் அங்கேயே குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை, விவசாய வேலை என பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14-ந் தேதி வரை 144 தடை உத்தரவை அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

மேலும் கேரள போலீசார் இவர்களை உடனே தமிழ்நாட்டுக்கு செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள், 25-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் திருச்சூரில் இருந்து கால்நடையாக புறப்பட்டனர். 3 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட 65 பேர் விடிய, விடிய நடந்து கேரள-தமிழக எல்லையை அடைந்தனர்.

உடனே அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் தொழிலாளர்கள் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி உதவி கேட்டனர். அப்போது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியில் அனைவரும் ஏறி சென்னிமலை அருகே ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனை சாவடிக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வந்தனர்.

அப்போது அங்கிருந்த சென்னிமலை போலீசார் அவர்கள் வந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். லாரியில் வந்த அனைவரும் 2 நாட்கள் உணவு இல்லாமல் இருந்ததால் மிகவும் களைப்புடன் இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லாரியை சென்னிமலை வழியாக செல்ல போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அனுமதித்தார். மேலும் பெருந்துறை வரை லாரியை போலீசார் யாரும் தடுத்து நிறுத்தாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

சென்னிமலையில் இருந்து லாரி பெருந்துறை செல்வதற்குள் பெருந்துறை போலீசாரும், சென்னிமலை மற்றும் பெருந்துறையில் உள்ள பத்திரிகை நிருபர்களும் லாரியில் வந்த 65 பேருக்கும் உணவை தயார் செய்து வைத்தனர். மேலும் இதுபற்றி அறிந்த பெருந்துறை தொகுதி தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ, லாரியில் வந்தவர்களுக்கு ஏதாவது நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய திங்களூர் அரசு டாக்டரான அருணை உடனடியாக அனுப்பி வைத்து மருத்துவ பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்தார்.

பின்னர் லாரியில் வந்த அனைவரையும் 1 மீட்டர் இடைவெளியில் அமர வைத்து அவர்கள் அனைவருக்கும் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், ராஜன் (போக்குவரத்து) ஏட்டு கோபால் ஆகியோர் சொந்த செலவில் பால், பழம், பிஸ்கெட்டுகளை வழங்கினார்கள். அதன்பின்னர் அனைவருக்கும் போலீசாரே உணவு பரிமாறினார்கள். அதைத்தொடர்ந்து லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Next Story