கால் முறிந்து அவதிப்பட்டதால் கிரேன் மூலம் தூக்கி சென்று ஆண் யானைக்கு தீவிர சிகிச்சை
கால் முறிந்து அவதிக்குள்ளாகி வரும் யானையை கிரேன் மூலம் தூக்கி சென்று தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை பகுதியில் கூட்டத்துடன் சுற்றிய 15 வயது ஆண் யானை, கடந்த 10 நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள காட்டுசீகலஅள்ளி கிராமத்திற்குள் வந்தது. அங்குள்ள விவசாய கிணற்றில் அது தவறி விழுந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று யானையை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
இதனிடையே கிணற்றில் தவறி விழுந்ததில் கால்முறிந்து அந்த யானை நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. அந்த யானை கிருஷ்ணகிரி அணையை அடுத்த துடுக்கனஅள்ளி அருகே உள்ள திம்மராயனஅள்ளியில் மாந்தோப்பில் நேற்று முன்தினம் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று நடமாட முடியாமல் தவித்த யானையை பார்த்தனர்.
அதே நேரத்தில் வனத்துறை கால்நடை மருத்துவக்குழுவினர் அங்கு சென்று யானைக்கு வலி போக துப்பாக்கி மூலம் மருந்து ஊசிகளை போட்டனர். மேலும் பழத்தில், மருந்து வைத்து கொடுத்தனர். இதன் பிறகு யானை மெல்ல காலை ஊன்றி நின்றது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கிரேன் வரவழைக்கப்பட்டு, அந்த யானையை தூக்கி, ஒரு வேனில் ஏற்றினார்கள். பிறகு அந்த யானையை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த யானைக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
யானைக்கு காலில் உள்ள காயம் ஆற மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வலி இல்லாமல் இருக்க யானைக்கு ஊசி போடப்பட்டுள்ளது. தற்போது யானையின் உடல் நிலை சற்று தேறி உள்ளது. அதை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு கொண்டு வந்துள்ளோம். சிகிச்சைக்கு பிறகு யானை குணம் அடைந்ததும், அதை வனப்பகுதிக்குள் விட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story