கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க காய்கறி சந்தைகளில் கிருமிநாசினி சுரங்கப்பாதை


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க காய்கறி சந்தைகளில் கிருமிநாசினி சுரங்கப்பாதை
x
தினத்தந்தி 7 April 2020 3:15 AM IST (Updated: 7 April 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் காய்கறி சந்தைகளில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் காய்கறிகளை வாங்கி செல்லும் வகையில் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறக்கப்பட்டன.

இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் காமராஜர் பஸ்நிலையம், ரவுண்டுரோடு, ஆர்.எம்.காலனி, எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, பாரதிபுரம் அண்ணாமலையார் பள்ளி, நத்தம் சாலையில் அரசு ஐ.டி.ஐ. வளாகம் ஆகிய 6 இடங்களில் காய்கறி சந்தைகள் திறக்கப்பட்டன. இந்த சந்தைகளில் காலை 6 மணி முதல் 11 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆனால், சந்தைக்கு காய்கறிகளை வாங்க வரும் அனைவரும் சோப்பு கொண்டு கைகளை கழுவுவது இல்லை. இதனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில் சந்தையின் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கும் கருவி பொருத்திய சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் முதல்கட்டமாக எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, அண்ணாமலையார் பள்ளி வளாகம் ஆகிய 2 இடங்களில் அமைந்துள்ள காய்கறி சந்தையில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. சந்தைக்கு காய்கறி வாங்க வரும் அனைவரும் அதன்வழியாக வரும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். இதேபோல் பழனி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சந்தையிலும் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் ஒருசில சந்தைகளில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர். 

Next Story