ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடமாடும் காய்கறி வண்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடமாடும் காய்கறி வண்டிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 April 2020 10:45 PM GMT (Updated: 7 April 2020 5:36 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடமாடும் காய்கறி வண்டிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவைகுண்டம், 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று காய்கறிகளை வழங்கும் வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் நடமாடும் காய்கறி வண்டிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர், ஸ்ரீவைகுண்டம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சோப்பு, முககவசம், கிருமிநாசினி, கை கழுவும் திரவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், தீயணைப்பு வாகனம் மூலம் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த அவர் ஆழ்வார்திருநகரியில் நடமாடும் காய்கறி வண்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதேபோன்று தென்திருப்பேரை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய நகர பஞ்சாயத்துகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சண்முகநாதன் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர் காசிராஜன், முன்னாள் யூனியன் தலைவர் விஜயகுமார், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஆறுமுகநயினார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அத்தியாவசிய பொருட்கள்

ஏரல் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், சோப்பு, முக கவசம், கை கழுவும் திரவம், கிருமி நாசினி, சீருடை போன்ற அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். ஏரல் தாசில்தார் அற்புதமணி, மண்டல துணை தாசில்தார் சேகர், நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்ட ஆவுடையப்பன், சண்முகநாதன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆத்திப்பழம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று பெருங்குளம் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story