ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பரவும் தகவலால் அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கும் மக்கள்


ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பரவும் தகவலால் அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கும் மக்கள்
x
தினத்தந்தி 10 April 2020 4:55 AM GMT (Updated: 10 April 2020 4:55 AM GMT)

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பரவும் தகவலால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மளிகை, பால், காய்கறி, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் பெட்ரோல் விற்பனை, கியாஸ் சிலிண்டர் வினியோகமும் நடக்கிறது.

இவை தவிர மற்ற அனைத்து கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டன. ஆட்டோக் கள், வாடகை வாகனங்கள், பஸ், ரெயில் உள்பட எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பலர் வேலையிழந்து வீட்டில் உள்ளனர். ஏற்கனவே சேமித்த பணத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, கொரோனா வைரஸ் சமுதாய தொற்றாக மாறுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

இது வேலையில்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்ற சிந்தனையும் மக்கள் மனதில் உள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றே மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர்.

இதனால் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதற்கு மக்கள் முடிவு செய்துவிட்டனர். அந்த வகையில் திண்டுக்கல்லில் நேற்று பெரும்பாலான மக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் பொருட்களை வாங்கி சென்றனர். அதிலும் குறிப்பாக 2 வாரத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.

இதில் அரிசி, உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகள், மசாலா மற்றும் நறுமண பொருட்கள் மட்டுமின்றி சோப்பு வகைகளையும் கூட பலர் அதிகமாக வாங்கி சென்றனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து விட்டது. இந்த சூழ்நிலையில் ஊரடங்கை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்து விட்டால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் பொருட்களை வாங்கி செல்வதாக மக்கள் கூறினர்.

Next Story