அன்னவாசல் அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி - ஜல்லிக்கட்டு காளையும் செத்தது


அன்னவாசல் அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி - ஜல்லிக்கட்டு காளையும் செத்தது
x
தினத்தந்தி 10 April 2020 10:00 PM GMT (Updated: 11 April 2020 1:51 AM GMT)

அன்னவாசல் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். ஜல்லிக்கட்டு காளையும் செத்தது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மின்சாரம் தடைபட்டு பின்பு விடப்பட்டது. இந்நிலையில் அன்னவாசல் அருகே உள்ள சேந்தமங்களத்தை சேர்ந்த விவசாயியான பொப்பன் (வயது 65) என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பொப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் வயல்வெளிக்கு இரை தேடி சென்ற அதே பகுதியை சேர்ந்த அழகு என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளையும் அதே மின்கம்பியை மிதித்து செத்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் அங்கு வந்து செத்த ஜல்லிக்கட்டு காளையை பிரேத பரிசோதனை செய்த பின்னர், அப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளை புதைக்கப்பட்டது.

இந்நிலையில் அன்னவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பொப்பன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். மின்கம்பியை மிதித்து விவசாயியும், ஜல்லிக்கட்டு காளையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story