அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முதியவர் கல்லால் அடித்துக்கொலை - வாலிபர் கைது


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முதியவர் கல்லால் அடித்துக்கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 April 2020 4:04 AM IST (Updated: 14 April 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை, வெள்ளாளர் தெருவில் சாலையோரம் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 60). இவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 11-ந் தேதி அதிகாலையில் கிருஷ்ணமூர்த்தி தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர், விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று கருதிய அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். எனினும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த முதியவரை ஓட ஓட விரட்டி கல்லால் பலமுறை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. எனவே விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார், கொலை வழக்காக மாற்றி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதே பகுதியில் சுற்றித் திரிந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்த ரபிபுல் இஸ்லாம்(33) என்பது தெரிந்தது. தனது வீட்டில் சண்டைபோட்டுவிட்டு ரெயில் மூலம் சென்னை வந்த அவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வேலை எதுவும் கிடைக்காததால் சாலையோரம் தங்கி இருந்ததும், அப்போது அங்கு தங்கி இருந்த முதியவர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கல்லால் அடித்துக்கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story