ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு - கொரோனாவால் இறந்தாரா?-பரபரப்பு தகவல்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட பெண் திடீரென இறந்தார். இதனால் அவர் கொரோனாவால் இறந்தாரா? என அவருடைய ரத்த மாதிரி, சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேருடன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார்? என்பதை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் அனைவரையும் உள்நோயாளியாக அனுமதித்து அவர்களுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே பலர் தங்களுக்கும் கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தின் பேரில் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொள்கிறார்கள்.
இதனால் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 47 பேர் பரிசோதனைக்காக வந்தனர். அவர்களில் சிலர் பல்வேறு நோய்களுடனும், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளுடனும் வந்தனர்.
பின்னர் அனைவருக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் கடுமையான நோய்களுடன் அவதிப்பட்ட 10 பேரை தொற்று நோய் பிரிவு வார்டு, தனிமைப்படுத்துதல் வார்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த 10 பேரில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் ஒருவர் ஆவார். அவர் கடுமையான காய்ச்சலுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் இறந்து விட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் கொரோனா அறிகுறியுடன் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அவருடைய சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த முடிவு வராததால் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
மேலும் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 5 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்களைக் கடந்து விட்டது. அவர்களின் உடல்நிலை தற்போது ஒரே சீராக உள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உள்ளதா? அல்லது கொரோனா பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட்டு விட்டார்களா? என்பதை கண்டறிய 5 பேருக்கு மீண்டும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்று தெரிய வந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் அவர்களுடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான் அவர்கள் பூரண குணமடைந்ததாக கருதப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில், மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த விமான நிலைய ஊழியரின் உறவினரான 70 வயது முதியவரின் உடல்நிலை மட்டும் சிறிது மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story