சேலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை தொடக்கம்


சேலத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை தொடக்கம்
x
தினத்தந்தி 19 April 2020 4:30 AM IST (Updated: 19 April 2020 2:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தொடங்கியது.

சேலம்,

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை முடிவுகள் வெளிவர 6 மணி நேரம் ஆகிறது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை எளிதாக கண்டறியக்கூடிய 24 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவி சீனாவில் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது. இதில் 1000 ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை இந்த கருவி மூலம் சிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு ரத்தம் மூலம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்ற முடிவு ½ மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டார். அப்போது ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் உடன் இருந்தன. பின்னர் இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:-

‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற கருவி மூலம் கொரோனா நோய் தொற்று துரிதமாகவும், எளிமையாகவும் ½ மணி நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். குறுகிய காலத்தில் அதிக நபர்களுக்கு தொற்று ஏற்படுவதன் மூலம் உண்டான நோய் எதிர்ப்பு சக்தியை தெரிந்து கொள்ள இயலும். இந்த பரிசோதனை கொரோனா வைரஸ் அறிகுறியான காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்ட 7 நாட்களுக்கு பின் நடத்தப்பட வேண்டும்.

எனவே சேலத்தில் தொற்று பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ் பாட்’ எனப்படும் பகுதிகளில் உள்ள நபர்களுக்கு வேகமாக பரிசோதனை நடத்தி அதன் முடிவுகளின் படி நோயை கட்டுக்குள் கொண்டு வர இயலும். ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் 2,260 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 896 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனை வருக்கும் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்தது என்று அவர் கூறினார்.

Next Story