மானாமதுரை அருகே ஆள் இல்லாத வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்கள் கைது
ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, அந்த வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை,
ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டி கிடக்கின்றன. இந்தநிலையில் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அன்னவாசல் புதூர் செல்லும் ரோட்டில் ஆள் இல்லாமல் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டில் மர்மமான முறையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் உள்ளே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம், சாராய ஊறல்கள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
விசாரணையில் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியூரில் வசிப்பதும், எப்போதாவதுதான் வந்து செல்வதும் தெரியவந்தது. எனவே ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அந்த வீட்டை சாராய கடையாக மாற்றியதுடன், அங்கு சாராயம் காய்ச்சியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கிளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக், ராஜேஷ் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story