அவினாசி அருகே, நிவாரண உதவி பெற வடமாநில தொழிலாளர்கள் முண்டியடிப்பு - பொருட்கள் வழங்காமல் அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்
அவினாசி அருகே நிவாரண உதவி பொருட்கள் பெற வடமாநில தொழிலாளர்கள் முண்டியடித்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் பொருட்கள் வழங்காமல் திரும்பிச்சென்றனர்
அவினாசி,
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் பழங்கரை பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமலும், வருமானமின்றி சாப்பிட வழியில்லாமல் உள்ளனர்.
எனவே இவர்களுக்கு வருவாய்துறையினர் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி இப்பகுதி வடமாநில தொழிலாளர்களுக்கு அவினாசியை அடுத்து தேவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வருவாய்த்துறையினரால், வரிசையாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமானவர்கள் நிவாரண பொருட்கள் வாங்க குவிந்தனர். சிலர் முண்டியடித்துக்கொண்டு உணவு பொருட்கள் வாங்க வந்தனர். அதற்கு, வருவாய்துறையினர் வரிசையில் வந்து வாங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் இடையிடையே நிறையபேர் பொருட்களை வாங்கி செல்கின்றனர். நாங்கள் மட்டும் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த வருவாய்துறையினர் உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விட்டு அந்த அறையை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story