ஊரடங்கு, 144 தடை உத்தரவு அமலில் உள்ளது: பெங்களூருவில் மக்கள் வெளியே வர வேண்டாம் - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேட்டி


ஊரடங்கு, 144 தடை உத்தரவு அமலில் உள்ளது: பெங்களூருவில் மக்கள் வெளியே வர வேண்டாம் - போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேட்டி
x
தினத்தந்தி 24 April 2020 5:21 AM IST (Updated: 24 April 2020 5:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சரக்கு வாகனங்களை இயக்கவும், தொழில் நிறுவனங்கள் இயங்கவும் அனுமதி அளித்து ஊரடங்கு உத்தரவை அரசு தளர்த்தியுள்ளது. இதுதொடர்பாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெளியே வர வேண்டாம்

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது. பெங்களூருவில் கட்டுமான தொழில், சில தொழில் நிறுவனங்கள் இயங்க மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல் அத்தியாவசிய தேவைக்கான சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்வோர் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

130 பேர் கைது

பெங்களூரு கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். அந்த கட்டிட தொழிலாளர்களுக்கான அடையாள அட்டைகளை கட்டிட காண்டிராக்டர்களே வழங்க வேண்டும் என்றும், அந்த அடையாள அட்டைகள் கிடைக்காதபட்சத்தில் தொழிலாளர்கள் போலீசாரிடம் வாங்கிக் கொள்ளலாம்.

பாதராயனபுரா வன்முறை தொடர்பாக கூடுதல் போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) சவுமேந்த் முகர்ஜி தலைமையில் 8 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 7 சிறுவர்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வன்முறைக்கு காரணமான முக்கிய நபர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக உள்ளனர். வன்முறை ஏற்பட்ட பாதராயனபுராவில் அமைதி திரும்பியுள்ளது.

41 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

தினமும் காலை மற்றும் மாலை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் அதிகளவில் வாகனங்கள் ஓடவில்லை. பெரும்பாலான சாலைகள் மூடப்பட்டு இருப்பதாலும், வாகனங்களில் வருவோரின் அடையாள அட்டைகளை சோதனை நடத்துவதால் சில சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது போல் தோன்றுகிறது.

ஆனால் வாகன நெரிசல் இல்லை. தடை உத்தரவை மீறியும், அடையாள அட்டை இல்லாமலும் சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 41 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை மீறி மக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தாலோ, வாகனங்களில் சுற்றித் திரிந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story