நாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கிச் சென்றனர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை சாப்பிட்ட திருப்தி என மகிழ்ச்சி


நாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கிச் சென்றனர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை சாப்பிட்ட திருப்தி என மகிழ்ச்சி
x
தினத்தந்தி 26 April 2020 6:28 AM IST (Updated: 26 April 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்ற மக்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை விரும்பி சாப்பிட்டதால் திருப்தி என மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்ற மக்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை விரும்பி சாப்பிட்டதால் திருப்தி என மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன் விற்க அனுமதி

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் குமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன. அதே சமயத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பஸ்நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் புதிதாக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து நாகர்கோவிலில் மீன்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் மீன் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதனால் மீன் பிரியர்களான குமரி மக்கள் மீன் உணவு சாப்பிட முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் மீன் வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகமும், மீன்வளத்துறையும் இணைந்து நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் மீன் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.

3 சந்தைகளில்...

மேலும் மீன் அங்காடிகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவில் மாநகரில் தற்போது செயல்படும் தற்காலிக சந்தைகளில் செயல்படும் என்றும், நடமாடும் மீன் அங்காடிகளில் அரை கிலோ, 1 கிலோ என்ற அடிப்படையில் மீன்கள் பொட்டலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அவற்றில் மீன்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், சரலூர் மீன் சந்தை, கன்கார்டியா பள்ளி மைதானம் ஆகியவற்றில் செயல்படும் சந்தைகளில் லாரிகள், சரக்கு வேன்கள் மூலம் நடமாடும் மீன் அங்காடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்காடிகளை தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கடல் உணவு நிறுவனம் நடத்தியது.

போட்டி போட்டு வாங்கினர்

அவற்றில் அரை கிலோ, ஒரு கிலோ எடையில் இறால் மீன்கள் பொட்டலமிடப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. மீன்வளத்துறை நிர்ணய விலையில் அதாவது ஒரு கிலோ ரூ.350-க்கு இறால் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இறால் மீன்களை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சரலூர் சந்தையில் செயல்பட்ட மீன் அங்காடியில் சிறிது நேரத்திலேயே மீன்கள் விற்றுத் தீர்ந்தன. இதனால் அவர்கள் கன்கார்டியா சந்தையில் நிறுத்தப்பட்டு இருந்த நடமாடும் மீன் அங்காடிக்கு சென்று மீன்களை வாங்கினர்.

மீன் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக மீன்களை வாங்கிச் சென்றனர். நாகர்கோவில் மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை ருசித்ததால் திருப்தி அடைந்தனர்.

மற்ற மீன்கள் விற்பனை

இதுதொடர்பாக நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கூறியதாவது:-

நாகர்கோவிலில் நேற்று ஒரே நாளில் 3 சந்தைகளில் செயல்பட்ட நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் 300 கிலோ இறால் மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான மீன்கள் விற்பனை செய்ய வியாபாரிகள் அனுமதி கேட்டுள்ளனர். 28-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் மற்ற மீன்களும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கும் விலையை நாங்கள் தான் நிர்ணயம் செய்து கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story