ஆந்திராவில் 48 நாட்களாக தவிக்கும் சேலம் தொழிலாளர்கள்: சொந்த ஊருக்கு அழைத்து வர கோரிக்கை


ஆந்திராவில் 48 நாட்களாக தவிக்கும் சேலம் தொழிலாளர்கள்: சொந்த ஊருக்கு அழைத்து வர கோரிக்கை
x
தினத்தந்தி 26 April 2020 11:00 PM GMT (Updated: 26 April 2020 9:08 PM GMT)

ஆந்திராவில் 48 நாட்களாக தவிக்கும் சேலம் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம், 

ஆந்திராவுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்ற சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 32 பேர் கடந்த 48 நாட்களாக அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட கல்லாங்குத்தூர் பகுதியை சேர்ந்த பிரதாப், சந்திரசேகர், பாண்டியன், அஜீத், கார்த்திகேயன், சுரேஷ்குமார் உள்பட 32 தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் என்ற பகுதிக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அனந்தப்பூர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் சொந்த ஊரான சேலத்துக்கு திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியுள்ளனர். இதுவரை 48 நாட்கள் ஆகியும் அவர்கள் அனைவரும் சேலத்துக்கு திரும்பி வராமல் பரிதவித்து வருகிறார்கள். சேலத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே ஊரடங்கு உத்தரவால் ஆந்திராவில் சிக்கி தவிக்கும் சேலம் தொழிலாளர்கள் 32 பேரை மீட்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து ஆந்திராவில் உள்ள சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக சென்றோம். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக சேலத்திற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்களை அழைத்து சென்ற என்ஜினீயர் தினமும் மூன்று வேளை சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இருந்தபோதிலும் வருகிற 3-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நாங்கள் சொந்த ஊரான சேலத்துக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளது. சேலத்தில் எங்களது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வெளியில் சென்று காய்கறி மற்றும் மளிகை கடைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். நாங்கள் சேலம் வந்தால் மட்டுமே எங்கள் குடும்பத்தை பாதுகாக்க முடியும். எங்கள் நிலைமை பற்றி தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

எனவே ஆந்திராவில் உள்ள 32 பேரையும் சேலத்துக்கு அழைத்து செல்ல தமிழக அரசும், சேலம் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினர்.


Next Story