நீட் பயிற்சிக்காக சென்ற கோவை மாணவ-மாணவிகள் ராஜஸ்தானில் தவிப்பு


நீட் பயிற்சிக்காக சென்ற கோவை மாணவ-மாணவிகள் ராஜஸ்தானில் தவிப்பு
x
தினத்தந்தி 30 April 2020 4:42 AM IST (Updated: 30 April 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு பயிற்சிக்காக சென்ற கோவை மாணவிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

கோவை,

நீட் தேர்வு பயிற்சிக்காக தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பயிற்சி மையத்துக்கு சென்றனர். அவர்கள் தங்களது பெற்றோருடன் அங்கு தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். 50 மாணவ-மாணவிகள் உள்பட அவர்களது பெற்றோருடன் சேர்த்து மொத்தம் 70 பேர் உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் ரெயில், பஸ் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மாணவ-மாணவிகள் அங்கு சிக்கியுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாணவ-மாணவிகள், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 மாணவிகள் உட்பட 14 பேர் தங்களது பெற்றோருடன் அங்கு சிக்கியுள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து அந்த மாணவ-மாணவிகள் கூறும்போது, நாங்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக கடந்த ஆண்டு மே மாதம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு எங்களது பெற்றோருடன் வந்தோம். அங்கு தங்கியிருந்து பயிற்சி பெற்றோம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் நாங்கள் எங்களது ஊர்களுக்கு திரும்பி வர முடியாமல் தவித்து வருகிறோம். எங்களுடன் பயிற்சி பெற்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை அந்தந்த மாநில அரசுகள் அழைத்துச் சென்றுவிட்டன. நாங்கள் எந்த உதவியும் இல்லாமல் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தவித்து வருகிறோம். தமிழகத்தைச் சேர்ந்த 50 மாணவ-மாணவிகள் உள்பட பெற்றோருடன் சேர்த்து 70 பேர் இங்கு உள்ளோம். எனவே எங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து செல்ல தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story