அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம், ஆஸ்பத்திரிகளின் திடக்கழிவு, கழிவுநீருடன் கலந்தால் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு
அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவு, கழிவுநீருடன் கலந்தால் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் மற்றும் ஆஸ்பத்திரிகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவு, கழிவுநீருடன் கலந்தால் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சீர்கேடு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் நேரடியாக பாதாள சாக்கடையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது.
பாதாள சாக்கடை உப விதிகளின் படி, கழிவறைகளில் உள்ள மலக்கழிவு மற்றும் அதனுடன் கலந்துள்ள கழிவுநீர் ஆகியவற்றை தனியாகவும், குளியல் அறை, சமையல் அறை, இதர கழிவுநீர் ஆகியவற்றை தனியாகவும் பிரித்தெடுக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். அதாவது குழாய் இணைப்புகள் வீட்டின் உட்பகுதியில் ஆய்வுத் தொட்டியில் இரண்டையும் சேர்த்து, பின்னர் ஆய்வுத் தொட்டியிலிருந்து பாதாள சாக்கடை ஆள் இறங்கும் தொட்டிக்கு குழாய் மூலம் இணைப்பதற்கு ஏற்றவாறு கட்டமைப்பு வசதிகள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்பு துண்டிப்பு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விதிகள் மற்றும் அரசாணையின் படி, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவைகளால் ஏற்படுகிற திடக்கழிவுகள் கழிவுநீர் அமைப்பில் சேருவதைத் தடுக்கவும், திடக்கழிவுகளை தனித்தனியாகப் பிரித்து வெறும் கழிவுநீர் மட்டும் தங்கள் கட்டிடத்தின் கடைசி கழிவுநீர்த் தொட்டியில் வரும்படியாக தனியாக பொதுமக்கள் தங்கள் கட்டிடத்தினுள் ஓர் கழிவுநீர் தடுப்பு வடிகட்டி அமைப்பினைக் கட்ட வேண்டும்.
தவறும் பட்சத்தில் சட்ட விதிகளின்படி அபராத தொகை வசூலிப்பதுடன், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும்.
மேற்கண்ட தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story