பிறந்தநாள் கேக் வெட்ட வீட்டுக்கு காதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை


பிறந்தநாள் கேக் வெட்ட வீட்டுக்கு காதலன் வராததால் பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2020 6:00 AM IST (Updated: 2 May 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாள் கேக் வெட்ட தனது வீட்டுக்கு காதலன் வராததால் விரக்தி அடைந்த பெண் போலீஸ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் சரண்யா (வயது 21). இவர், சென்னை ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் ஆகும். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு சென்ற சரண்யா, சிறிது நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அவரது வீட்டின் அருகில் வசிக்கும் தோழியான மற்றொரு பெண் போலீஸ் ஒருவர் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சஜிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தூக்கில் தொங்கிய சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

காதலன் வராததால் விரக்தி

தற்கொலை செய்த பெண் போலீஸ் சரண்யா, 2017-ம் ஆண்டு தன்னுடன் போலீஸ் பயிற்சி பெற்ற 23 வயது போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரும் சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றுமுன்தினம் அந்த போலீஸ்காரருக்கு பிறந்தநாள். இதனால் சரண்யா, தனது காதலனை பிறந்தநாள் கேக் வெட்ட தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதற்காக வீட்டில் கேக், சாக்லேட் மற்றும் பரிசு பொருட்கள் வாங்கி வைத்து காதலனுக்காக காத்திருந்தார்.

ஆனால் பணி காரணமாக அவர் தற்போது வரமுடியாது என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story