அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம்


அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 3 May 2020 3:44 AM IST (Updated: 3 May 2020 3:44 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நாளை முதல் பொருட்கள் வழங்கப்படுகிறது.

விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.1,000 மற்றும் ரேஷன் அட்டைகளுக்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை அந்தந்த ரேஷன் கடைகள் மூலமாக கடந்த மாதம் இலவசமாக வழங்கப்பட்டது.

அதுபோல் இம்மாதத்திற்குரிய ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், வானூர், மரக்காணம், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய 9 தாலுகாக்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை ஆகிய 6 தாலுகாக்களுக்குட்பட்ட 1,254 ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் 9 லட்சத்து 71 ஆயிரத்து 852 பேர் பயனடைய உள்ளனர்.

டோக்கன் வழங்கும் பணி

இதையொட்டி அத்தியாவசிய பொருட்களை பெற வரும் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் தெரு, பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு டோக்கன் கொடுத்து சுழற்சி முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் வட்ட வழங்கல் அதிகாரிகள், குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் பகுதியில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கினர்.

நாளை முதல் பொருட்கள் வழங்கப்படும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமையுடன்) முடிவடையும். நாளை (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்க வசதியாக மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைத்தும், பேரிகார்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அடையாள குறியீடுகளும் போடப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story