வெளிமாவட்டங்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய லாரி டிரைவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை


வெளிமாவட்டங்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய லாரி டிரைவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை
x
தினத்தந்தி 2 May 2020 10:46 PM GMT (Updated: 2 May 2020 10:46 PM GMT)

வெளிமாவட்டங்களுக்கு சென்று நீலகிரி திரும்பிய லாரி டிரைவர்களுக்கு, பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என்று அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைக்காய்கறிகள் வெளிமாவட்டங்களுக்கு லாரிகளில் தினமும் விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.

இதற்கிடையே வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு நீலகிரிக்குள் வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பதில் தொய்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சளி மாதிரி

அதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதையடுத்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் லாரி டிரைவர்களுக்கு முதல் கட்டமாக மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்து உள்ளது. ஊட்டியில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று லாரி டிரைவர்கள், கிளனர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் மற்றும் டாக்டர்கள் முழு பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து மாதிரியை சேகரித்தனர். லாரி டிரைவர்கள் சென்று வந்த பயண விவரங்கள், செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாவட்ட சித்த மருத்துவ பிரிவு அலுவலர் செந்தில்குமார் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பொடி வழங்கினார். நேற்று 60 பேருக்கு மாதிரி எடுத்து குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கங்கள் மூலம் மற்றவர்களுக்கு தொடர்ந்து எடுக்கப்பட உள்ளது.

கோயம்பேடு சென்று வந்தவர்கள்

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவல் வந்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சென்றவர்கள் இருக்கிறார்களா என்று கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி நீலகிரியில் இருந்து லாரி டிரைவர்கள் 40 பேர் சென்னை சென்று வந்ததாக சோதனைச்சாவடிகளில் போலீசார் பதிவு செய்து உள்ளனர். இதில் 27 பேர் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை இறக்கி விட்டு வந்து இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அவர்கள் 27 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசித்து வருவதால், அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

Next Story