ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்


ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2020 5:21 AM GMT (Updated: 4 May 2020 5:21 AM GMT)

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருப்பத்தூர் கோட்டத்தில் உள்ள அனைத்துத் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசார் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

கொரோனா தடுப்புப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், தாங்கள் பணிபுரியும் இடங்களில் மொத்த மக்கள்தொகை, அதில் பெரியவர், சிறியவர் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும், வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்டறிந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனரா? என்பதை கண்காணிக்க வேண்டும். சோதனைச் சாவடிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை செய்து, அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தைக் கடந்து வரும் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வருவோரை தவிர்த்து, ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கொரோனா பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல் (திருப்பத்தூர்), பாலகிருஷ்ணன் (வாணியம்பாடி), சச்சிதானந்தம், (ஆம்பூர்), தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி, இன்ஸ்பெக்டர்கள் பழனிமுத்து, மதனலோகன், உலகநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story