சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் திறப்பு; சாலைகளில் மக்கள் கூட்டம்


சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் திறப்பு; சாலைகளில் மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 4 May 2020 11:45 PM GMT (Updated: 4 May 2020 8:33 PM GMT)

ஊரடங்கில் சில தளர்வுகள் நேற்று முதல் அமல்படுத்தப்Sபட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர். வங்கிகளில் கூட்டம் வழக்கத்தைவிட அலைமோதியது.

சிவகங்கை,

ஊரடங்கு தளர்வு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் வழக்கம்போல் சலூன் கடை, டீக்கடை, ஒரு சில ஜவுளிக்கடை உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. மேலும் கடந்த 35 நாட்களாக வீடுகளில் முடங்கி இருந்த மக்கள் நகர் புறங்களில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டமாக சுற்றித்திரிந்தனர்.

காரைக்குடி பகுதியில் நேற்று சாலைகளில் அதிக அளவில் மக்கள் கூட்டமாக காணப்பட்டனர். இதுதவிர இந்த ஊரடங்கை பயன்படுத்தி காரைக்குடி பெரியார் சிலை முதல் ஐந்து விளக்கு வரை உள்ள முக்கிய சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக நகராட்சி மூலம் குழிகள் தோண்டப்பட்டதால் இந்த சாலையில் நேற்று வாகனங்களில் அதிகஅளவு மக்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

இதுதவிர மே மாதம் தொடங்கியதால் பென்சன் எடுப்பவர்கள், சம்பள பணம் எடுப்பவர்கள், பிறருக்கு பணம் அனுப்ப இருந்தவர்கள் கூட்டம் நேற்று வங்கிகளில் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து வங்கிகள், ஏ.டி.எம்.களில் நேற்று மக்கள் போதிய சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக காணப்பட்டனர். மேலும் காய்கறி மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், பல்பொருள் அங்காடிகள், இறைச்சிகடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் அரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தனர்.

இதனால் சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று ஆங்காங்கே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மீண்டும் கொரோனா மாவட்டமாக ஆகிவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் தரப்பில் அச்சம் ஏற்பட்டது. 

எனவே இனிவரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் எவ்வித தேவையும் இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

Next Story