233 டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு: கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் வழங்க முடிவு


233 டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு: கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் வழங்க முடிவு
x
தினத்தந்தி 6 May 2020 5:15 AM IST (Updated: 6 May 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள 5 இடங்களில் உள்ள கடைகள் தவிர 233 டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட இருக்கிறது. அப்போது கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அனுப்பர்பாளையம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூரில் தொழிற்சாலைகள், கடைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன. மாவட்டத்தில் உள்ள 238 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்ததை அடுத்து சில நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மாவட்ட மேலாளர் லூர்துசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முடிவில் ஊழியர்கள் அனைவருக்கும் சானிடைசர், கையுறை ஆகியவை வழங்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லூர்துசாமி கூறியதாவது:-

திருப்பூர் மாநகரில் 101 கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மங்கலம், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட 4 இடங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளான தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த 4 கடைகள் மற்றும் மாநகரில் பல்பொருள் அங்காடி வளாகத்தில் உள்ள 1 கடை உள்பட 5 கடைகளும் திறக்கப்படாது. இதுதவிர மாவட்டம் முழுவதும் 233 கடைகளை நாளை (7-ந்தேதி) திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும். மேலும் 6 அடி தூரத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், 5 பேர் மட்டுமே கடை வளாகத்தில் நிற்க வேண்டும். இதற்காக அனைத்து கடைகளிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு வருகிறது.

கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் டோக்கன் சிஸ்டம் செயல்படுத்தப்படும். மேலும் மது வாங்க வருபவர்களுக்கு கைகளில் சானிடைசர் அடித்த பிறகே, மது கொடுக்கப்படும். கடந்த 40 நாட்கள் கடைகள் மூடப்பட்டதால் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கடைகள் திறக்கப்பட உள்ளதால் ஊழியர்கள் அனைவரும் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி கொண்டிருக்கின்றனர்.

இன்று(புதன்கிழமை) அதிகாலை மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்காக வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள வழிமுறைகளை ஊழியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதேபோல் மது வாங்க வருபவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story