ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு


ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அழிப்பு
x
தினத்தந்தி 5 May 2020 11:20 PM GMT (Updated: 5 May 2020 11:20 PM GMT)

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி வேடசந்தூர் கோர்ட்டில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.

வேடசந்தூர்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 மாதத்திற்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் போலி மது ஆலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 1,392 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள், வேடசந்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி கோர்ட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடி சென்றனர்.

மது அழிப்பு

இதுதொடர்பாக வேடசந்தூர் சந்தைப்பேட்டையை சேர்ந்த பிச்சைமுத்து (வயது 45), அவரது மகன் சதீஷ் (22), சந்தோஷ் (20), பால்பாண்டி (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 29 மதுபாட்டில்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

இதன் எதிரொலியாகவும், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும், தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களை அழிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி நேற்று திண்டுக்கல் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முருகன், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் முன்னிலையில் வேடசந்தூர் கோர்ட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை போலீசார் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் குழிதோண்டி மதுவை ஊற்றி அழித்தனர்.

Next Story