மதுரையில் கடைகள் திறந்ததால் சாலைகளில் மக்கள் கூட்டம் - வெறிச்சோடிய காட்சி மாறியது
மதுரையில் கடைகள் நேற்று திறக்கப்பட்டதால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமானது. இதனால் கடந்த பல நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட காட்சி மாறியது.
மதுரை,
மதுரையில் வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மதுரை புறநகரில் உள்ள அனைத்து தனிக்கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அந்த கடைகள் அனைத்தும் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருந்தன.
மதுரை மாநகரை பொறுத்தவரை புத்தக விற்பனை நிலையங்கள், பேன்சி ஸ்டோர்ஸ், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடைகள், அடகு கடைகள், ஜவுளிக்கடைகள், செருப்பு விற்கும் கடைகள், எழுதுபொருள் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பொம்மை விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள் மற்றும் டேட்டா என்ட்ரி, சாலை உணவகங்கள் மற்றும் டீ கடைகள், தெருவில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே இந்த கடைகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் சில ஜெராக்ஸ் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்து இருந்தன. இந்த கடைகள் தவிர கம்ப்யூட்டர் விற்பனை கடைகள், செல்போன் கடைகள், ஆட்டோ மொபைல் கடைகள், மின்சாதன பொருள் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. குறிப்பாக பெயிண்ட் கடைகள், மின்சாதன பொருள் கடை தான் நேற்று அதிகளவில் திறந்து இருந்தன. மற்ற கடைகள் திறக்கப்பட வில்லை. அடைக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து கடை உரிமையாளர்கள் கூறும் போது, “ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. எனவே கடையை திறக்கவில்லை” என்றனர். எனவே இந்த கடைகள் அனைத்தும் இன்று முதல் முழு வீச்சில் செயல்படும் என தெரிகிறது.
அதேவேளையில் நேற்று சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக கீழமாசி வீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் கடந்த பல நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் நேற்று காட்சி மாறி வாகன போக்குவரத்துடன் காணப்பட்டன.
Related Tags :
Next Story